திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவையில் பல்லக்கு சரிந்தது: பிரமோற்சவத்திற்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவம் வெகுவிமர்சையாக கொண்டப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடந்த 3ம் தேதி பிரமோற்சவம் தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் வரும் 1ம் தேதி இரவு 9 மணியளவில் புஷ்ப பல்லக்குடன் விழா தொடங்கியது. பிப்ரவரி 3ம் தேதி காலை 5 மணியளவில் துவஜாரோகணம், ெதாடர்ந்து அன்றிரவு புன்னை மர வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில், இரவு 7.30 மணிக்கு சிம்மவாகனத்தில் திருவீதியுலா நடந்தது. இந்நிலையில், நேற்று காலை 5.30 மணியளவில் கருட சேவை நடந்தது. இதையொட்டி உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோயில் மாட வீதியில் அர்ச்சகர்கள் பல்லக்கை சுமந்தபடி கருட சேவை வீதியுலா நடந்தது. அப்போது, பல்லக்கில் 2 பேர் உற்சவருக்கு காற்று வீசியபடியும், 2 பேர் திருக்குடை பிடித்தபடியும் இருந்தனர். அர்ச்சகர் ஒருவர் உற்சவருக்கு பூஜை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென பல்லக்கின் ஒரு பகுதியில் இருந்த தண்டு உடைந்தது. இதனால், பல்லக்கில் இருந்த அர்ச்சகர்கள் ஒருபுறமாக சரிந்து விழுந்தனர். பல்லக்கில் இருந்து உற்சவர் சரியும் போது அருகில் இருந்த அர்ச்சகர்கள் பிடித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், உற்சவர் திருவீதி உலாவை காண வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து பல்லக்கிற்கு கீழே வைக்கப்பட்டிருந்த தண்டு மாற்றப்பட்டு மீண்டும் திருவிதி உலா நடந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: