பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க மறுத்து அலைக்கழிப்பு: தலைமை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க மறுத்து அலைக்கழிப்பு தலைமை செயலாளர் வரும் மார்ச் 9ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிரப்பதாவது: தமிழகத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களான இருளர், மலையாளி, காட்டுநாயக்கன், குருமன், கொண்டாரெட்டி, மலைக்குறவன், மலைவேடன் போன்றவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளோம். 2 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பழங்குடியினர் என பெற்றோர் சாதி சான்றிதழ் வைத்து இருந்தால் அவர்களது குழந்தைகளுக்கும் பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு அடிப்படையில் தமிழக அதிகாரிகள் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க மறுத்து அலைக் கழித்து வருகின்றனர். குறிப்பாக திண்டுக்கல், பழனி சப்-கலெக்டர்கள் காட்டு நாயக்கன், மலைவேடன், தேவராஜன் ஆகிய பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்து வருகின்றனர். எனவே உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி துரை.ஜெயச்சந்திரன்,  இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், திண்டுக்கல் மற்றும் பழனி சப்-கலெக்டர்கள் அடுத்த மாதம் மார்ச் 9ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: