முதல்முறை விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு விரைவு தபால் மூலம் வீட்டிற்கே இலவசமாக அடையாள அட்டை: தபால் துறையுடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்

சென்னை: முதல்முறை விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாக வாக்காளர் அடையாள அட்டையை வீட்டிற்கே வந்து வழங்க தபால் துறையுடன் தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முதல் வாக்காளர்களாக விண்ணப்பித்தவர்களுக்கு கலர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தபால் துறை மூலம் இலவசமாக விரைவு அஞ்சல் மூலம் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும். இதற்காக 5 ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை 21,39,395 பேர் முதல் வாக்காளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படும்.

வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் இதேபோன்று அடையாள அட்டை வழங்க திட்டம் உள்ளது. அவர்கள் விண்ணப்பித்தால், அதற்கான உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டு வழங்கப்படும். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வருகிற 10ம் தேதி தமிழகம் வர உள்ளார். அப்போது தலைமை செயலாளர், வருமான வரி துறை அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள நடத்துகிறார். தமிழகத்தின் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையமே அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: