ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலையில் கால்நடைகளை அவிழ்த்துவிட்டால் 10 ஆயிரம் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடைகளை சாலைகளில் கட்டவிழ்த்து விட்டால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது மாடுகளை பொது இடங்களில் கட்டவிழ்த்து விட வேண்டாம்.

விதிகளை மீறி சுற்றித்திரியும் மாடுகள் உள்ளாட்சி துறையினரால் பிடித்து, கால்நடை பராமரிப்பு மையங்களில் ஒப்படைக்கப்படும். தன்னிச்சையாக சுற்றித்திரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் 1,000, 2வது முறை பிடிபட்டால் 2,000 மற்றும் 3வது முறையாக பிடிபட்டால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, இதேநிலை நீடித்தால் மாடுகள் கைப்பற்றி பொது ஏலம் மூலமாக விற்கப்படும். மேலும், உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது மாடுகளை வீட்டில் பராமரித்து விபத்தில்லா மாவட்டத்தினை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: