கடன் விண்ணப்பத்தை தாமதப்படுத்தியதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் சத்துணவு அமைப்பாளர் தர்ணா: பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு

பாடாலூர்: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் சத்துணவு அமைப்பாளர் தீக்குளிக்கப்போவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் இரூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர் சவீதா (38). இவர், அரியலூரில் உள்ள சத்துணவு அமைப்பாளர் கடன் வழங்கும் சங்கத்தில் விண்ணப்பம் பெற்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடன் வேண்டி விண்ணப்பம் அளித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை சரிபார்த்து தேவையான ஆவணங்கள் தயாரித்து அரியலூரில் உள்ள கடன் வழங்கும் சங்கத்திற்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விண்ணப்பத்தை அனுப்பாமல் அலைக்கழிப்பதாக கூறி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று பெட்ரோல் கேனுடன் வந்த சவீதா, தீக்குளிக்க போவதாக கூறி அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற பாடாலூர் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, விண்ணப்பத்தை உடனடியாக அனுப்ப உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சபிதா அங்கிருந்து சென்றார். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: