வெறுப்பு பிரச்சாரங்களால் இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது: விமர்சனம் செய்யும் வெளிநாட்டு பிரபலங்களுக்கு அமித்ஷா பதிலடி

டெல்லி: வெறுப்பு பிரச்சாரங்கள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கவோ, புதிய உச்சங்களை நாடு தொடுவதையோ யாரும் தடுக்க முடியாது என்று விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வெளிநாட்டு பிரபலங்களுக்கு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் எல்லை பகுதிகளில் 70 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இணையதள சேவை அந்த பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரபலங்கள் ட்வீட்

விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ஏன் இதை பற்றி யாரும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று ஸ்விடன் நாட்டை சேர்ந்த சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அண்ணன் மகள் மீனாவும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதற்க்கும், விவசாயிகளுக்கு எதிராக துணை ராணுவத்தினர் பயன்படுத்தப்படுவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரிஹானாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள இங்கிலாந்து எம்பி Claudia webbe இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப போவதாக கூறியுள்ளார்.

இந்தி சினிமா பிரபலங்கள் பதிலடி

இவர்களின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தி சினிமா பிரபலங்கள் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் இந்திய உள்விவிவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கண்டித்துள்ளனர். இந்திய விவகாரங்களை வெளிநாட்டவர்கள் வேடிக்கை பார்க்கலாமே தவிர அதில் கலந்து கொள்ள முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இதே கருத்தை கிரிக்கெட் பிரபலங்கள் அணில் கும்ப்ளே, விராட் கோலி, ரெய்னா, ரஹானே, உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.

அமித்ஷா ட்வீட்

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமித்ஷா வெளிநாட்டவர்களின் இது போன்ற பிரச்சாரங்களால் இந்தியாவின் ஒற்றுமையை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்தியா புதிய உச்சங்களை தொடுவதை பிரச்சாரங்கள் மூலம் தடுக்க முடியாது என்றும், பிரச்சாரங்களால் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்ய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியா ஒற்றுமையாக உள்ளது என்றும் ஒன்றுபட்டு வளர்ச்சியை நாம் எட்டுவோம் என்று #IndiaAgainstPropaganda #IndiaTogether என்ற ஹாஸ்டேக்கையும் அவர் பகிர்ந்துள்ளார்.

வெளியுறவுத்துறை விளக்கம்

விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு பிரபலங்கள் பொறுப்புடன் ட்வீட் செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறையும் கூறியுள்ளது. இந்த போராட்டங்கள் இந்தியாவின் உள்விவகாரம் என்று கூறியுள்ள வெளியுறவுத்துறை கருத்து தெரிவிப்பதற்கு முன்பு இதை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ப.சிதம்பரம் கேள்வி

இந்திய விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் கருத்து தெரிவிக்க கூடாது என்றால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சிகள் வன்முறையில் ஈடுபட்ட போது பிரதமர் திரு மோடி அதை கண்டித்தது ஏன்? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போன்று நேபாளம், மியான்மர் இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு பிரச்சனைகளில் வெளியுறவுத்துறை கருத்து தெரிவிப்பது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.

Related Stories: