வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கையில்லை: மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்: மகாராஷ்டிரா சபாநாயகர் ஆலோசனை

மும்பை: வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கையில்லை எனக் கூறப்படுவதால், வாக்குச்சீட்டு முறையில் மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய சட்டம் கொண்டு வருதல் குறித்து சபாநாயகர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக பழைய முறையிலான வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வருகின்றன. இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் பல்வேறு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஆனால், இதுவரை வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது என்பதை தொழில்நுட்ப ரீதியாக எவரும் நிரூபிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால், வாக்குப்பதிவு இயந்திர அடிப்படையிலேயே நாடாளுமன்ற, சட்டப் பேரவை, உள்ளாட்சி தேர்தல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா தலைமையிலான கூட்டணியின் சட்டப்பேரவை சபாநாயகர் நானா படோல் நேற்று அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பல்தேவ் சிங், கல்வி அமைச்சர் அமித் தேஷ்முக், சட்டமன்ற செயலக செயலாளர் ராஜேந்திர பகவத் மற்றும்  சட்ட மற்றும் நீதித்துறை செயலாளர் பூபேந்திர குரவ் ஆகியோர் கலந்து  கொண்டனர். பின்னர் சபாநாயகர் நானா படோல் கூறுகையில், ‘அரசியலமைப்பின் 328வது பிரிவின்படி, தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை  உருவாக்க மாநில சட்டமன்றங்களுக்கு உரிமை உண்டு.

 

இதன் அடிப்படையில், பழைய முறையிலான வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்த வழிவகை செய்யப்படும். இந்த சட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமாக்கி அமல்படுத்தும் போது, உள்ளாட்சி மற்றும் மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களில் பொதுமக்கள் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்க முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சந்தேகங்களும் அகற்றப்படும். வாக்குச்சீட்டு முறையா? வாக்குப்பதிவு இயந்திரமா? என்பதில் எதில் நம்பகத்தன்மை உள்ளது என்பதை பொதுமக்கள்  தீர்மானிக்க வேண்டும். எனவே, அதிகாரிகள் ஆலோசனை நடத்தில் விரைவில் சட்டங்களை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: