விவசாயிகள் போராட்டத்தில் பாக். சதி: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பகீர்

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தானின் சதி இருக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர்  அமரீந்தர் சிங் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.

அதில்  பாஜக, ஆம்ஆத்மி ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. மற்ற கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்திற்கு பின் அமரீந்தர் சிங் கூறுகையில்,  ‘விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதி வேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.  பாகிஸ்தானின் எல்லை மாநிலமான பஞ்சாப்பில் குழப்பத்தை ஏற்படுத்த சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை சப்ளை  செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. எனவே பாகிஸ்தானின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடக்கூடாது.

இந்திய எல்லைக்குள் எத்தனை ட்ரோன்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் வந்துள்ளன என்பது எனக்குத் தெரியும். விஷயங்கள் கையை  விட்டு ேபாகும் முன், இந்த சிக்கலை தீர்க்க நாம் பணியாற்ற வேண்டும்’ என்றார். முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்தில் மூன்று வேளாண்  சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், ஜனவரி 26  அன்று டெல்லியில் நடந்த ‘ஸ்பான்சர்’ வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு எதிராக  பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், அவர்களை உடனடியாக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட  வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: