குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

நெய்வேலி : குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுபோன்று தினந்தோறும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோரும் வந்து செல்கின்றனர்.  இந்த பேருந்து நிலையத்தில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் 70க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

இந்த கடைகளில் சிலர் பொதுமக்கள் நடந்து செல்லும் வழிப்பாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்துகின்றது. மேலும் சிறு வியாபாரிகள் பேருந்து நிலையம் சுற்றிலும் ஆங்காங்கே சிறு கடைகள் அமைப்பதால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் நிற்பதால் வயதானவர்கள் சிலர் மயக்கம் அடைந்து கீழே விழுகின்றனர்.

பேருந்து நிலையத்தில் உள்ள குழந்தைகள் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறையில் சிறு வியாபாரிகள் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் இடமாக மாற்றியுள்ளனர். சிலர் இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. எனவே குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் கடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: