பள்ளிகொண்டாவில் போலீஸ் சோதனை வேனில் ₹5.87 லட்சம் குட்கா பறிமுதல்-சென்னையில் முக்கிய புள்ளிக்கு வலை

ஒடுகத்தூர் : பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை வேனில் கடத்தி சென்ற ₹5.87 லட்சம் மதிப்பிலான குட்காவை பள்ளிகொண்டா போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்து, சென்னையில் உள்ள முக்கிய புள்ளி குறித்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3 மணியளவில் பள்ளிகொண்டா சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேனை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அவர்  முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் வேனில் சோதனையிட்டனர்.அதில், மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், வேனை ஓட்டிவந்தவர் பெங்களூருவை சேர்ந்த மருது(34) என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் உள்ள ஒருவருக்கு குட்காவை ஏற்றி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வேன் மற்றும் அதில் இருந்த 933 கிலோ எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹5 லட்சத்து 87 ஆயிரத்து 460 என போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து டிரைவர் மருதுவை கைது செய்தனர். மேலும் சென்னையில் குட்கா விற்பனை செய்யும் முக்கிய புள்ளியை கைது செய்யும் முயற்சியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் பெங்களூருவில் இருந்து குட்காவை அனுப்பி வைத்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: