திடீர் மழையால் பயிர்கள் சேதம் மத்திய குழு தமிழகம் வருகை

சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் திடீரென எதிர்பாராது பெய்த மழையால் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி வீணானது. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசு சார்பில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் ஒரு குழுவும், மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டியன் தலைமையில் ஒரு குழுவும் என இரண்டு குழுவினர் இன்று இரவு சென்னை வருகிறார்கள்.

ஒவ்வொரு குழுவிலும் தலா 3 பேர் இடம்பெற்று இருப்பார்கள். இந்த குழுவினர் நாளை (4ம் தேதி) தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட உள்ளனர். அதன்படி அக்னிகோத்ரி தலைமையிலான குழுவினர் நாளை காலை மதுரை சென்றடைகிறார்கள். பின்னர் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்துக்கும், 5ம் தேதி சிவகங்கை மாவட்டம் சென்றுவிட்டு சென்னை திரும்புகிறார்கள். மற்றொரு குழுவினர் பால்பாண்டியன் தலைமையில் நாளை காலை புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்துக்கும், 5ம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்துக்கும் சென்று பார்வையிடுகிறார்கள்.

Related Stories: