சேத்தியாத்தோப்பில் உள்ள 25 கண்மாய் பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதமாக அமைந்துள்ள 25 கண்மாய்  பாலம் சுமார் நூற்றாண்டுகளை கடந்து விட்ட பாலமாகும். தற்போது பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியில்  இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் 25 கண்மாய் வழியாக திறந்துவிடவும், உபரி நீரை வெளியேற்றவும், போக்குவரத்துக்காகவும்  பாலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பாலம் மிக குறுகலானதாக உள்ளதால், பேருந்துகள் வழிவிட்டு ஒதுங்க முடியாமல் பாலத்தின் மைய பகுதியில் சிக்கி கொள்வதால் அடிக்கடி  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பேருந்துகள் பாலத்தை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. இதனால் கும்பகோணம், சென்னை செல்லும் பயணிகள், வாகன  ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல், கரும்பு போன்றவைகளை குறித்த இடத்திற்கு, குறித்த நேரத்திற்கு கொண்டு செல்ல  முடியாமலும் அவதியடைந்து வருகின்றனர்.

பாலத்திற்கு அருகே உள்ள குமார உடைப்பு வாய்க்கால் பகுதியின் அருகே உள்ள சாலையை கடந்த காலங்களில் வெள்ளம் மூழ்கடித்து சென்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.. எனவே, குறுகலான இப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலத்தை கட்டி கொடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்,  விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: