டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ஜெய்ஷ் உல் இந்த் பொறுப்பேற்பு: ஈரான் நாட்டவர்களிடம் துருவித் துருவி விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெய்ஷ் உல் இந்த் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. டெல்லியில் ஏபிஜே அப்துல்கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே வெள்ளியன்று மாலை குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்து பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் இது டிரெய்லர் தான் என குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே போலீசார் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் மோதல் நிலவி வருகின்றது. மேலும் ஈரானின் அணு விஞ்ஞானியை இஸ்ரேல் சாட்டிலைட் ஆயுதம் மூலமாக கொன்றுவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த சூழலில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த இந்த குண்டுவெடிப்பு ஈரான் தீவிரவாதிகளின் சதிதிட்டமா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இந்தியா வந்த ஈரானியர்கள் குறித்த விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். மேலும் உரிய விசா இல்லாமல் மற்றும் காலாவதியான விசாக்களுடன் ஓட்டல்களில் தங்கியிருக்கும் ஈரானியர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றது. சந்தேகத்திற்கு இடமான ஈரானியர்களிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரிக்கின்றனர். குண்டுவெடிப்பு சம்பவம் நடத்த சமயத்தில் 2 பேர் கால் டாக்சியில் வந்திறங்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவர்கள் குறித்து சம்மந்தப்பட்ட கார் டிரைவரிடம் விசாரிக்கின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது சுமார் 45000 மொபைல் போன்கள் அப்பகுதியில் இயங்கியது. அத்தகவல்களும் விசாரிக்கப்படுகிறது. இதற்கிடையே குண்டுவெடிப்புக்கு ஜெய்ஷ் உல் இந்த் என்ற தீவிரவாத அமைப்பு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையில் தேசிய புலனாய்வு பிரிவும் களமிறங்கி உள்ளது. மேலும் இஸ்ரேலின் உளவு அமைப்பான சொசாத்தும் இணைந்துள்ளது.

Related Stories: