மின் விபத்துக்களை தவிர்க்க ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி மின்கம்பிகள் அமைக்க வேண்டும்: விரைவான நடவடிக்கைக்கு வாரியம் உத்தரவு

சென்னை: மின்விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி மின்கம்பிகளை அமைக்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து தமிழக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழக மின்சாரவாரியம் விபத்துக்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ள உத்தரவுகளின்படி கம்பங்களை அமைக்க  வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், ‘சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களுக்கள் மீது மின்சாரம் பாய்ந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதற்கு மின்கடத்திகளில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் போதுமான தரை இடைவெளி இல்லாதது போன்றவை முக்கிய காரணமாகும்.

இது மனித உயிரிழப்பை மட்டும் ஏற்படுத்தாமல், மின்வாரியம் மீது மக்களிடத்தில் மோசமான பிம்பத்தை உருவாக்குகிறது. எனவே அனைத்து தலைமை பொறியாளர்களும், தங்களிடத்தில் பணிபுரியுடன் கள பணியாளர்களிடத்தில் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின் படி தரை இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட கள அலுவலர்கள் தங்களது அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை விதிமுறைகளின்படி மின்கம்பிகள் இல்லை என்றால் அவற்றை மாற்றி அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தரநிலைகளின்படி மின்கம்பிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் வளைந்த நிலையில் இருக்கும் மின்கம்பங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.

தளர்வாக உள்ள மின்கம்பிகள் மற்றும் சாய்ந்த நிலையில் உள்ள கம்பங்களையும் மாற்றி சரியான அளவில் அமைக்க வேண்டும். இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்பணிகள் மேற்கொண்டதற்கான அறிக்கையினை மின்வாரிய தலைமையகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஆய்வு மேற்கொள்ளும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள்தான் பொறுப்பாகும்’ எனத்தெரிவித்துள்ளது. இதன்படி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்கம்பிகள் உயர விபரம்

தெருக்களின் குறுக்கே உள்ள சேவை இணைப்புகள் உள்பட அனைத்து மின்இணைப்புகளுக்கான அனைத்து மின்கம்பிகளும், தாழ்வழுத்த இணைப்பாக இருந்தால் தரையிலிருந்து 5.8மீ உயரத்திலும், 11 முதல் 33 கிலோ வோல்ட்டாக இருந்தால் 6.1மீ உயரத்திலும் இருக்க வேண்டும். இதேபோல் தெருக்களின் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகளை பொறுத்தவரை தாழ்வாழுத்த இணைப்பாக இருந்தால் 5.5மீ உயரத்திலும், 11 முதல் 33 கிலோ ேவால்ட் வரையிலான இணைப்பாக இருந்தால் 5.8மீ உயரத்திலும் இருக்க வேண்டும் என மின்வாரியம் கூறியுள்ளது.

Related Stories: