வதந்தி பரப்பியதாக சசிதரூர் மீது வழக்கு

புதுடெல்லி: விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணி ஒருவர் இறந்தது பற்றி தவறான தகவல்களைப் பரப்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், மூத்த பத்திரிகையாளர்கள் மீது அரியானா அரசும் வழக்கு பதிவு செய்துள்ளது. குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போலீசார் மீது தாக்கதல் நடத்தப்பட்டது. இந்த களேபரத்தில் டிராக்டர் கவிழ்ந்து நவ்ரீத் சிங் என்பவர் உயிரிழந்தார். ஆனால், போலீசார் அவரை சுட்டுக் கொன்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டார். சில பத்திரிகையாளர்களும் இதே தகவலை வெளியிட்டனர். டிராக்டர் கவிழ்ந்ததால்தான் அவர் உயிர் இழந்தார். ஆனால், போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல் பரவியதால் பெரும் பதற்றமும், குழப்பமும் ஏற்பட்டது. பிரேதப் பரிசோதனையில் நவ்ரீத் சிங் மீது துப்பாக்கி குண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்த பிறகே பிரச்னை ஓய்ந்தது.

எனினும் உண்மை நிலை அறியாமல் வதந்தியைப் பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குருகிராமை சேர்ந்த மஹாபிர் சிங் என்பவர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சசிதரூர் உள்ளிட்டோர் மீது அரியானா போலீசாரும் நேற்று வழக்கு பதிவு செய்தனர். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் ஏற்கனவே இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: