ராணிப்பேட்டை-சென்னைக்கு பயணிகள் ரயில் இயக்கும் திட்டமில்லை: பொது மேலாளர் தகவல்

சென்னை: தலைமை பாதுகாப்பு அதிகாரியின் அனுமதியை பெற வேண்டும் என்பதால் இப்போதைக்கு ராணிப்பேட்டை-சென்னைக்கு பயணிகள் ரயில் இயக்கும் திட்டம் இல்லை என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் கூறினார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ், ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் மற்றும் அதிகாரிகள், சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, அரக்கோணம், வாலாஜா சாலை இடையேயான ரயில் பாதைகளில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ரயில் நிலைய தண்டவாளத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள், ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள், ரயில் நிலையம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்றும், கழிப்பறை மற்றும் ஊழியர்களின் ஓய்வு அறைகளையும் ஆய்வு செய்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்கவும், காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணத்துக்கு புதிய ரயில் சேவையை தொடங்க வேண்டும், பெண்கள் பயணம் செய்ய கூடுதல் பெட்டியை ஒதுக்கீடு செய்யவும், காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை தொன்மை வாய்ந்த ரயில் நிலையமாக அறிவிக்க வேண்டும். ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு பயணிகள் ரயில் இயக்குவதற்கு முன் இந்த தடத்தை (ராணிப்பேட்டை- வாலாஜா ரோடு) பயணிகள் ரயில் இயக்குவதற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, பயணிகள் ரயில் இயக்குவதற்கு முன் ரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரியின் அனுமதியை பெற வேண்டும். ஆகையால், இப்போதைக்கு ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு பயணிகள் ரயில் இயக்கும் திட்டம் இல்லை. ராணிப்பேட்டையில் இருந்து சரக்கு போக்குவரத்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்குள்ள தொழிற்சாலைகள் பயன்பெறும். சரக்கு போக்குவரத்து ரயில் சேவையினால் எதிர்காலத்தில் ரயில்வே துறைக்கு வருவாய் அதிகரிக்கும். மேலும் திண்டிவனம் முதல் நகரி வரையிலான ரயில் போக்குவரத்து சேவை உள்ளிட்ட பல திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்த போதிலும், போதிய நிதி இல்லாத காரணத்தினால் தற்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.  மேலும் அரக்கோணம் மின்சார இன்ஜின் பராமரிப்பு பணிமனைகளின் செயல்பாடுகள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்து மேம்பாட்டு பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: