சிங்கள அரசால் தமிழக மீனவர்கள் படுகொலை மத்திய, மாநில அரசை கண்டித்து திமுக உண்ணாவிரத போராட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

துரைப்பாக்கம்: சிங்கள அரசால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதை தட்டிக்கேட்காத மத்திய, மாநில அரசை கண்டித்து திமுக உண்ணாவிரத போராட்டம், மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. தமிழக மீனவர்களை கொடூரமாக படுகொலை செய்த சிங்கள அரசை கண்டித்தும், அதனை தட்டிக்கேட்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் திருவான்மியூர் தெற்கு மாட வீதியில் நேற்று நடந்தது. வேளச்சேரி எம்எல்ஏ வாகை சந்திரசேகர், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மாநில மீனவர் அணி அமைப்பாளர் பரிமேலழன், பாலவாக்கம் சோமு மற்றும்  திமுக நிர்வாகிகள், சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 13 மீனவ கிராமத்தை சார்ந்த மீனவ மக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

போராட்டத்தின்போது மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ கூறுகையில் “சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறுகிறது. 4 மீனவர்கள் உயிரிழப்பு விபத்து என சிங்கள அரசு தெரிவித்து வரும் நிலையில், இந்திய அரசு அதை மறுக்காமல் மவுனம் காத்து வருகிறது. மத்திய அரசுக்கும், சிங்கள அரசுக்கும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதிமுக அரசு, துறை சார்ந்த அமைச்சர் உள்ளிட்டோரும் மவுனமாக உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய மோடி அரசு தமிழகத்தை தனி நாடாக பார்க்கிறது. அதனால்தான் தமிழகத்திற்கு முறையாக எந்த நிதியும் ஒதுக்கவில்லை. தமிழகத்திற்கு ஏற்படும் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. தங்களுடைய ஆட்சி காலத்தில் கட்டிய சொந்த கட்டிடங்களுக்கு ஜெயலலிதா பெயரை வைக்காமல், திமுக ஆட்சி காலத்தில் கட்டிய கட்டிடங்களுக்கு ஜெயலலிதா பெயரை வைப்பதும், அரசாங்க இடங்களில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைப்பதும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றினார். மாலை 5 மணி அளவில் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Related Stories: