கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் எடப்பாடி திடீர் சந்திப்பு: 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாக ஜெயக்குமார் தகவல்

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் எடப்பாடி நேற்று இரவு திடீரென சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாலை 4.45 மணி முதல் 6.15 மணி வரை நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகும் முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஒரு மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்து கருத்து பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் தீர்மானம் மீது தமிழக கவர்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளார். இந்த நிலையில்தான், பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, தமிழக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதுபற்றி இன்னும் சில நாட்களில் தமிழக கவர்னர் பதில் அளிப்பார் என்று நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானம் குறித்து கவர்னரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதேநேரத்தில், தமிழக கவர்னரின் செயலாளர் விஷ்ணு, மத்திய சொலிசிட்டர் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை சந்தித்துப் பேசினார். இது குறித்து ஜெயக்குமார் கூறும்போது, 7 தமிழர்கள் விடுதலை குறித்து அழுத்தம் கொடுப்பதற்காக கவர்னரை முதல்வர் சந்தித்தார். அப்போது, 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் தெரிவித்தார்’’ என்றார்.

Related Stories: