கிரானைட் குவாரி தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரை மாவட்டத்தில் புதிய கிரானைட் குவாரிகள் தொடங்கவோ அல்லது உரிமம் வழங்கவோ கூடாது என கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கிரானைட் குவாரிகள் உரிமம் வழங்கும் விவகாரத்தில் அனைத்தும் முறைப்படி தான் நடத்தப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக எதுவும் பின்பற்றப்படவில்லை.

இது அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும். அதனால் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து புதிய கிரானைட் குவாரிக்கு உரிமம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதலாவதாக மனுவை விசாரித்த நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் விளக்கமளிக்க நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல்நசீர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய முந்தைய உத்தரவிற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.

Related Stories: