குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்: அருப்புக்கோட்டையில் பரபரப்பு

அருப்புக்கோட்டை: குடிநீர் வழங்கக் கோரி அருப்புக்கோட்டையில் இன்று காலை காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு தாமிரபரணி மற்றும் வைகை குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருப்புக்கோட்டை சரிவர தண்ணீர் வரவில்லை. முக்கியமாக, 25 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

இந்த நிலையில், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம், உச்சிசாமி கோயில் 2வது குறுக்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நகராட்சி உதவி பொறியாளர் காளீஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பெண்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: