தச்சநல்லூரில் விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படுமா?பொதுப்பணித்துறை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெல்லை :  தச்சநல்லூர் மண்டலம் பிரான்குளம் பகுதியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கும் பாசனக் கால்வாயை சரிசெய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லை மாநகரில் தச்சநல்லூர் மண்டலம் 2வது வார்டுக்கு உட்பட்ட அழகநேரி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு 2 குளங்களில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது. இந்த குளங்களுக்கு நெல்லை கால்வாயில் இருந்து பிரிந்து பிரான்குளம் பகுதியில் உள்ள பாசனக் கால்வாயின் மூலம் தண்ணீர் வந்து சேரும். தற்போது பிரான்குளம் பகுதி வழியாக செல்லும் பாசனக் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரான்குளம் பகுதியில் உள்ள பாசனக் கால்வாயில் வரும் பாசன நீரும், மழை காலங்களில் பெய்யும் மழைநீரும் வடிந்தோடி அருகே ரயில்வே பாதையின் கீழ் உள்ள பாலத்தின் வழியாக அழகநேரி பகுதி குளங்களுக்கு செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிரான்குளம் பகுதியில் உள்ள ெதாடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள கால்வாயின் மீதுள்ள பாலத்தின் இருபுறமும் அப்பகுதி மக்கள் குப்பைகளைக் கொட்டியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து வரும் கழிவுநீரும் இந்தக் கால்வாயில்தான் கலக்கிறது. சமீபத்தில் பெய்த மழைநீர் மற்றும் வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் வடிந்தோட முடியாமல் நீண்ட நாட்களாக தேங்கி பாசி பிடித்த நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் கொசு, ஈ பிரச்னைகள் அதிகரித்திருப்பதோடு, இங்கு கொட்டப்படும் குப்பைகள் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த கால்வாயின் அருகே இருந்த வழிப்பாதைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் நடந்து செல்வதே பெரும் சிரமாக உள்ளது. எனவே இப்பகுதி மக்களுக்கு ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகளை சரிசெய்வதோடு, கால்வாயை தூர்வாரி நீண்ட நாட்களாக விவசாயிகளுக்கு இருந்து வரும் பாசனநீர் பிரச்னைகளையும் சரிசெய்வதற்கு மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழகநேரி பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: