நாகர்கோவில் மாநகராட்சியில் தினசரி 5 டன் பிளாஸ்டிக் கழிவு-தரம் பிரித்து வழங்க வேண்டுகோள்

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியில் தினசரி 5 டன் பிளாஸ்டிக்  கழிவுகள் சேர்வதால், அவற்றை தரம் பிரித்து வழங்க மாநகர அலுவலர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் நமது அன்றாட  வாழ்வில் மக்காத குப்பையான பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு நீக்கமற கலந்து  விட்டது. குமரியில் கடந்த 2009ம் ஆண்டு கலெக்டர் ராஜேந்திர ரத்னுவால், 20  மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், கப்புகள் தடை விதிக்கப்பட்டு, மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு 2010ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்  அமலுக்கு வந்தது.

ராஜேந்திர ரத்னு  பணியிட மாற்றத்திற்கு பின்னர் இந்த நடவடிக்கை படிப்படியாக கைவிடப்பட்டது.  தற்போது தமிழக அரசு பிளாஸ்டிக் தடை அறிவித்தாலும், அனைத்து இடங்களிலும்  பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. குமரி மாவட்டத்தில் பெருமளவு  கட்டுப்படுத்தப் பட்டாலும் மளிகை பொருட்கள், உணவு பொருட்கள், எண்ணை வகைகள்  என அனைத்து வகை பொருட்களும் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டே  விற்பனைக்கு வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது.

இதனால்,  உள்ளாட்சி அமைப்புகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்  பிரித்துவழங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. இதன்படி வாரத்திற்கு ஒரு நாள்  மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை விடுகளில் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். எனினும்  பலரும், குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கி வருகின்றனர்.

நாகர்கோவில்  மாநகராட்சியில் தினசரி சராசரியாக 115 டன் குப்பைகள் சேர்கிறது. இதில்  55 டன் மக்கும் குப்பைகளும், 10 டன் இலைதழை  போன்ற தாவர கழிவுகளும், 5டன்  பிளாஸ்டிக் கழிவுகளும் உள்ளன. இதே போல் மாவட்டம் முழுவதுமே பிளாஸ்டிக்  குப்பைகள் அதிகம் சேர்கின்றன.

இவ்வாறு சேரும்,  பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு பயன்படும் என்பதனை விலைக்கும்,  மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சிமென்ட் ஆலைகளில் எரிப்பதற்கும்  அனுப்பி வைக்கப்படுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த வாரம் 8  மெட்ரிக் டன் குப்பைகள் மறுசுழற்சி மற்றும் எரியூட்ட அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர் நல அலுவலர் டாக்டர் கின்ஷால்  கூறியதாவது: நாகர்கோவிலில் தற்போது சராசரியாக 5 டன் பிளாஸ்டிக் குப்பைகள்  சேர்கிறது. இதனை பலரும், தரம் பிரிக்காமல் வழங்குகின்றனர். இதனால்,  துப்புறவு பணியாளர்கள் பணி நேரம் பாதிக்கப்படுவதுடன், விரைவாக திடக்கழிவு  மேலாண்மை பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில்  தினசரி சேரம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

திறந்த நிலையில் கொண்டு செல்லப்படும் குப்பைகள்

குப்பைகளை கொண்டு செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக வலை விரித்து மூடி தான் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவு உள்ளது. ஆனால் சமீப காலமாக, நாகர்கோவில் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் டெம்போக்கள், மினி டெம்போக்கள், டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் போது மூடி வைக்கப்படுவதில்லை. வலை விரிக்காமல் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுவதால், இந்த வாகனத்தின் பின்னால் பைக்கில் செல்பவர்களின் தலையில் குப்பைகள் விழுகின்றன. மேலும் சாலைகளிலும் சிதறுகின்றன.

வாகனத்தின் இருந்து விழும் கழிவுகள் சாலைகளில் அப்படியே கிடக்கின்றன.எனவே மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வலை விரிக்காமல் வாகனங்களில் குப்பைகளை கொண்டு செல்லும் பணியாளர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: