கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் யமுனை மாசு குறையும்: டெல்லி அரசு தகவல்

புதுடெல்லி: தரம் உயர்த்தப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் யமுனை நதியின் மாசு குறைக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. யமுனை நதி கடுமையாக மாசு அடைந்துள்ளது. இது பற்றி தேசிய பசுமைதீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று டெல்லி அரசு சார்பில் யமுனை நதியை சுத்தப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: யமுனை நதியை சுத்தப்படுத்த உபி, அரியானா, டெல்லியில் தரம் உயர்த்தப்பட்ட போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். இதன்மூலம் யமுனைநதியில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்த பின்னர் ஆற்றில் விட்டால் அடுத்த மூன்று முதல் 5 ஆண்டுகளுக்குள் யமுனை நதியின் மாசு படிப்படியாக குறைக்கப்படும்.

ஆனால் இது நடக்க போதுமான நிதி ஒதுக்க வேண்டும். அதனால்தான் டெல்லியில் பல சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மரம் வெட்ட அனுமதி அளிக்காததது, கொரோனா ஊரடங்கு, நிதிப்பற்றாக்குறை, கட்டுமான பணியில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்கள் வருகை குறைவு ஆகியவை காரணமாக கொண்ட்லி, ரித்தாலா, ஓக்லா மற்றும் குரோனேசன் பில்லர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதில் குேரானேசன் பில்லர் பணிகள் வரும் மார்ச் 31ம் தேதி முடிவடையும். கொண்ட்லி, ரித்தாலா, ஓக்லா பணிகள் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த 4 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முடிவடையும் போது தினமும் 279 மில்லியன் காலன் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும். 2023 மார்ச் மாதம் இந்த நிலையங்களில் சுத்திகரிப்பு பணிகள் தொடங்கப்படும். ஆனால் ரித்தாலா, ஓக்லா பகுதி சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மரம் வெட்டுவதற்கு அனுமதி கேட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய வனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. மேலும் டெல்லி குடிநீர் வாரியத்தில் நிதிப்பற்றாக்குறை உள்ளது. இதனால் பணிகள் தாமதம் அடைந்துள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: