மு.க.ஸ்டாலின் குறித்து பேச்சு முதல்வர் மீது சட்ட நடவடிக்கை: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

சென்னை: ‘‘மு.க.ஸ்டாலின் குறித்து பொய்யாக பேசிய முதல்வர் மீது திமுக சட்ட நடவடிக்கை எடுக்கும்” என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வெளியிட்ட அறிக்கை: முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் உரையாற்றும் போது, உண்மை பேசுவதற்குப் பதிலாக, “ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவிடம் கட்டக்கூடாது என்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது பொய்’யாகப் பேசியிருக்கிறார். ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் விவாகரத்தில் பெருந்தன்மையுடன்நடந்து கொண்ட எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல பேசியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பினை அறிவித்தபோதும் சரி-அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி அறிவித்த போதும் சரி, எதிர்க்கட்சித் தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ அல்லது திமுக சட்டமன்ற உறுப்பினர்களோ அதற்கு எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. ஆனால், ‘ஜெயலலிதா நினைவிடம் கட்டக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள், பழனிசாமி கூட்டணியில் இன்று இடம் பெற்றுள்ள பாமக கட்சியினர் தான் என்பதை ஏனோ பழனிசாமி ‘முழு பூசணிக்காயை சேற்றில் மறைப்பதைப் போல’ பேசியிருக்கிறார்.

நான்காண்டு காலமாக ஆட்சியில் இருந்த இவர், இதுவரை இதுபற்றி வாய் திறக்காமல்,  சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,  தொடர்ந்து இவர் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது. முதல்வர் பழனிசாமியின் இப்போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது. இனியும் இப்படிப்பட்ட பொய்களை பேசி வருவாரேயானால், இவர்மீது சட்ட நடவடிக்கையை திமுக எடுக்கும் என எச்சரிக்கிறேன்.

Related Stories: