டிராக்டர் பேரணியில் வன்முறை 44 விவசாய சங்க தலைவர்கள் தேடப்படும் நபர்களாக அறிவிப்பு: டெல்லி போலீஸ் அதிரடி

புதுடெல்லி:  டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 44 விவசாய சங்கத் தலைவர்களை டெல்லி போலீசார், தேடப்படும் நபர்களாக அறிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர்.  இதில் வன்முறை வெடித்தது. விவசாயிகள் தாக்கியதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த  வன்முறை சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் 33 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். வன்முறை தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தின் தலைவர்களில் 44 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் சக்யுக்தா கிசான் மோர்ச்சா செய்தி தொடர்பாளர்கள். மற்ற 38 பேரும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள்.

இந்நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விவசாய சங்க தலைவர்களை தேடப்படும் நபராக டெல்லி போலீஸ் நேற்று அதிரடியாக அறிவித்தது. மேலும்,   பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படியும் போலீசார் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.  இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே.வங்க பேரவையில் தீர்மானம்: வேளாண் சட்டங்களை நிராகரித்து கேரளா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டப் பேரவைகளில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்திலும், சட்டப்பேரவையில் இந்த சட்டங்களுக்கு எதிராக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உபி எல்லையில் போராட்டம் வாபஸ்

டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக, அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழுவும், பாரதிய கிசான் சங்கமும் நேற்று முன்தினம் போராட்டத்தில் இருந்து விலகின. இந்நிலையில், உத்தர பிரதேச எல்லையில் உள்ள பக்பத்தில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளும் போலீசாரின் கடும் கெடுபிடிகளால் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தை கைவிட்டு, வீடு திரும்பினர்.

Related Stories: