உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் விடுதலை குறித்து நாளைக்குள் ஆளுநர் முடிவு: ரவிச்சந்திரன் பரோல் வழக்கில் அரசு தகவல்

மதுரை: பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் நாளைக்குள் முடிவெடுப்பார் என தமிழக அரசு ஐகோர்ட் கிளையில் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ள மகன் ரவிச்சந்திரனுக்கு நீண்ட கால பரோல் அல்லது 2 மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு வக்கீல் ஆனந்தராஜ் ஆஜராகி, ‘‘தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் 29ம் தேதிக்குள் (நாளை) முடிவெடுப்பார். அவரது முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார். வக்கீல் திருமுருகன் ஆஜராகி, ‘‘அதுவரை பரோல் வழங்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து மனு மீதான விசாரணையை பிப்.5க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories:

>