மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்!: ஊர்வலமாக சென்று திமுக-வினர் அஞ்சலி..உதயநிதி, ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

சென்னை: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி திமுக சார்பில் பேரணி நடைபெற்றது. செம்மொழியாம் தமிழ்மொழியை காக்க தங்களுடைய இன்னுயிரை கொடுத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையாக அவர்களது நினைவிடங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனை முன்னிட்டு திமுக-வினர் அமைதி பேரணி மேற்கொண்டனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று இந்த பேரணியில், எம்.எல்.ஏ. சுப்ரமணியன், எம்.பி. ஆர். எஸ்.பாரதி, திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக விருகம்பாக்கத்தில் உள்ள தியாகி அரங்கநாதன் இல்லத்திற்கு செல்லவிருக்கும் உதயநிதி ஸ்டாலின், தியாகிகளின் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு மரியாதை செய்யவிருக்கிறார்.

தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்டபோராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களில் சிலர் சிறைக்கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர். ஜனவரி 25 1965ம் ஆண்டு நடந்த பெரும் போராட்டத்தில் பலர் குண்டடி பட்டும், தீக்குளித்தும் தங்கள் உயிரை இழந்தனர். மொழிப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் நாளை மொழிப்போர் தியாகிகள் தினமாக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: