சென்னையில் குடியரசு விழா கோலாகலம்!: மின்னொளியில் ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள்...இரவிலும் பட்டொளி வீசிப் பறந்த மூவர்ணக்கொடி..!!

சென்னை: 72வது குடியரசுதினவிழாவை ஒட்டி சென்னையில் உள்ள கட்டிடங்கள் மின்னொளி வெள்ளத்தில் ஜொலிக்கின்றன. சென்னை நகரின் முக்கிய பகுதிகள், அரசு கட்டிடங்கள் குடியரசு தினவிழாவை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேப்பியர் பாலம், வருமானவரித்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடங்களில் வண்ண விளக்குகள் தோரணமாக தொங்கவிடப்பட்டுள்ளன. இதனால் இரவிலும் கட்டிடங்கள் ஒளி வெள்ளத்தில் பளிச்சிடுகின்றன. சென்னை விமான நிலையமும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் உள்ள மேற்கூரைகளில் மின் விளக்குகளில் மூவர்ண தேசியக்கொடி பிரம்மாண்டமாக ஒளிர்கிறது. 3 கட்ட அணிவகுப்பு ஒத்திகை முடிந்துள்ள நிலையில் சென்னை காமராஜர் சாலை குடியரசு தின அணிவகுப்புக்காக சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில், தமிழக அரசு சார்பில், ஜனவரி 26ல், குடியரசு தின விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

அன்று காலை, 8:00 மணிக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தேசியக் கொடியேற்ற உள்ளார். ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின நிகழ்ச்சியில், சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். தற்போது கொரோனா தொற்றால் நிலவும், அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் நிகழ்த்தும், கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: