மதுராந்தகத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுராந்தகம்: மதுராந்தகத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு பருவ மழை பெய்ததால் விவசாயிகள் நெற்பயிரிட்டு இருந்தனர். அவை, தற்போது அறுவடை செய்யப்படுகிறது. இதையாட்டி, மதுராந்தகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற  அரசு அதிகாரிகள், மதுராந்தகம் நகரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து, இந்த கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 700 முதல் 800 நெல் மூட்டைகள் பெற்று கொள்ளப்படும். சன்ன ரக நெல் ஒரு கிலோ ₹19.58 காசுகள், குண்டு நெல் ஒரு கிலோ ₹19.18 காசுக்கும் கொள்முதல் செய்யப்படும் என நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் மதுராந்தகம் ஏரிநீர் பாசனம் செய்யும் ஏராளமான விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிலையம் வரும் மே அல்லது ஜூன் மாதம் வரை திறந்திருக்கும். இதேபோன்று, மதுராந்தகம்  குறு வட்டத்துக்கு உட்பட்ட கெண்டிரச்சேரி, மாம்பாக்கம், வில்வராயநல்லூர், சிலாவட்டம், அருங்குணம், சோழன்தாங்கல் புளியரணங்கோட்டை, பாக்கம், புளிக்கொரடு, வசந்தவாடி, ஆமையம்பட்டு, தேவாதூர், மாரிபுத்தூர், காவாதூர்  ஆகிய பகுதிகளிலும்  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து திறக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: