திமுக ஆட்சியில் பால்விலை ரூ.28; அதிமுக ஆட்சியில் ரூ.40 விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கிறது: மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியில் விலைவாசி விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம், புளியந்தோப்பு மைதானத்தில் நேற்று காலை மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் மு.பூபதி தலைமை வகித்தார். அரக்கோணம் எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் திரண்டிருந்த மக்களிடையே அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த, மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரித்து நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும். மினி கிளினிக் திட்டம் தற்காலிக திட்டம் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு அறிவிப்பால், மக்களை ஏமாற்றும் மோசடி திட்டம் என்று வெட்ட வெளிச்சமாகியது.

தேர்தல் நேரத்தில் பொதுமக்களின் வரிப்பணம் ஆயிரம் கோடியில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். வரிப்பணத்தில் திட்டங்கள் தீட்டி  சாதனைகள் செய்ய வேண்டும். ஆனால் வரிப்பணத்தை கொண்டு அரசாங்கம் சார்பில்  விளம்பரத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம். திமுக ஆட்சியில் உள்ள விலைவாசியும்  தற்போது உள்ள விலைவாசியும் பொதுமக்களுக்கு தெரியும். விலைவாசி விஷம் போல்  ஏறி கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் பால் விலை 28 ரூபாய். அதிமுக ஆட்சியில்  40 ரூபாயாகவும், கேஸ் விலை 275 ரூபாய் இருந்தது. இது 750 ஆக  உயர்ந்துள்ளது. பெட்ரோல், பருப்பு, காய்கறி உள்ளிட்ட அனைத்தும் விலைகளும்   உயர்ந்து உள்ளது. மணல், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சுங்கவரி, ரயில்  கட்டணம், பேருந்து கட்டணம், மின் கட்டணம் என விலைவாசி உயர்ந்து  ஒவ்வொரு  குடும்பத்திற்கும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அதிகமான செலவுகள்  செய்யும் சூழல் உள்ளது.

இது மத்திய பாஜக ஆட்சியாலும், தமிழக அதிமுக   ஆட்சியாலும் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு  விலக்கு வாங்கப்படும். அது திமுகவின் கொள்கை அதை நிச்சயம் செய்வோம்.  பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். ஜெயலலிதா மரணத்தில்  மர்மத்தை திமுக ஆட்சி அமைந்ததும் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.  தேர்தல் பிரசாரத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை இல்லாமல் ஒருமையில்  பேசி வருகிறார்.  தரம் கெட்டு பழனிச்சாமி பேசி வரலாம். முதல்வர் என்ற பதவியில்  உள்ளவர்  கொச்சைப்படுத்தி பேசுவது என்பது அவரது தகுதிக்கு அழகில்லை. அவரை போன்று  நானும் பேச முடியும் ஆனால் நாங்கள் பேச மாட்டோம் நாங்கள் கலைஞரால்  வளர்க்கப்பட்டவர்கள்.

திமுக ஆட்சியில் அமர்ந்ததும் திருத்தணி மக்களின் நீண்ட நாள் கனவான கைத்தறி மற்றும் விசைத்தறி ஜவுளி பூங்கா அமைக்கப்படும். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என மக்கள் ஆராய்ந்து முடிவு செய்து, வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.இதில் மாநில நெசவாளர் அணி துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், துணை செயலாளர் ஆதிசேஷன், பொறுப்பு குழு உறுப்பினர்கள் திருத்தணி சந்திரன், திராவிடபக்தன், ஆதாம், ரவீந்திரநாத், உதயசூரியன், நாகன், குமரன், சிவசங்கரி, சரஸ்வதி சந்திரசேகர், சிட்டிபாபு, ஒன்றிய செயலாளர்கள் டி.ரவீந்திரா, சண்முகம், பழனி, ஆர்.கே.ரவி, சி.ஜெ.சீனிவாசன், பாபு, வினோத்குமார், தேவி குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

Related Stories: