மாடியில் இருந்து விழுந்து சில்லுக்கருப்பட்டி பட நடிகர் பலி

சென்னை: தமிழில் பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீராம், நேற்று மாடியில் இருந்து விழுந்து பலியானார். ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனேனா நடிப்பில் வெளியான படம், ‘சில்லுக்கருப்பட்டி’. இதில் இடம்பெற்ற 4 கதைகளில், ‘டர்ட்டுல்ஸ்’ என்ற கதையில் முதியவர்கள் காதலிக்கும் சம்பவம் இடம்பெற்றது. இதில் நடித்திருந்தவர், கிராவ்மகா ஸ்ரீராம் (60). தொடர்ந்து அவர் ‘இமைக்கா நொடிகள்’, ‘அதோ அந்த பறவை போல’, ‘வலிமை’, ‘கூட்டத்தில் ஒருவன்’, ‘எனிமி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதோடு நடிகர், நடிகைகளுக்கு சண்டைப் பயிற்சியும் அளித்துள்ளார். தமிழக காவல்துறையில் கிராவ்மகா என்ற இஸ்ரேல் தற்காப்புக்கலையை அறிமுகப்படுத்தினார்.

சென்னை பெசன்ட் நகர் 19வது குறுக்குத்தெருவில் உள்ள வீட்டு மாடியில், நேற்று காலை 6 மணியளவில் தற்காப்புக்கலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் ஸ்ரீராம். அப்போது 2வது மாடியில் தண்ணீர் டேங்க் இருக்கும் பகுதிக்கு சென்று எட்டிப் பார்த்திருக்கிறார். திடீரென்று கால் இடறி மாடியில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஸ்ரீராம் மரணம் குறித்து விசாரணை நடத்தினர். பிறகு ஸ்ரீராம் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. நேற்று மாலை வேளச்சேரி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. ஸ்ரீராமுக்கு மனைவி ஸ்ரீகீதா, மகள் ஸ்ரீஜா உள்ளனர். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் ஸ்ரீஜா உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

Related Stories: