குமரியில் கிணறு மாயமான விவகாரம்: ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விசாரணை தொடங்கியது

திங்கள்சந்தை: குமரி மாவட்டம், இரணியல் அருகே மொட்டவிளையில் கிணறு மாயமான விவகாரம் தொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விசாரணையை தொடங்கி உள்ளார். இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மொட்டவிளை  பகுதியை சேர்ந்த ஊர் தலைவர் செல்லத்துரை, இரணியல் காவல் நிலையத்தில் ஒரு  புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கல்குளம் வட்டம்  குருந்தன்கோடு ஏ வில்லேஜ் கட்டிமாங்கோடு ஊராட்சியின் 10 வது வார்டுக்குட்பட்ட மொட்டவிளையில், பஞ்சாயத்து நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு, நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 31.12.2020 முதல் கிணற்றை காண வில்லை.

சிலர் கிணற்றை மண்  நிரப்பி கிணறு இருந்த இடத்தை சமதளமாக்கி தனது சொத்தோடு சேர்த்து அதை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து கட்டிமாங்கோடு ஊராட்சி மன்ற தலைவர்  மற்றும் குருந்தன்கோடு ஏ வில்லேஜ் கிராம நிர்வாக  அலுவலருக்கும், குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் நேரில் மனு கொடுத்து விளக்கியும் ஆவணங்களை காட்டியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே பொது கிணற்றை மூடி பொது  கிணறு இருந்த பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த புகாரை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் அனுப்பி உள்ளார்.

வடிவேல் பட பாணியில் கிணற்றை  காணோம் என புகார் அளித்து, ரசீதும் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயஜீ புகார் தாரருக்கும், ஆக்ரமித்துள்ளதாக கூறப்படும் நபருக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு சொந்தமான கிணறு சுமார் 60 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் அனுமதியின்றி கிணற்றை மூடியது சட்டவிரோதமான செயல். இது கண்டிக்கத்தக்கது. கிணறு அமைந்துள்ள இடம் தங்களுக்கு உரியது என்றால், தகுந்த ஆதாரங்களுடன் 3 நாட்களுக்குள் நேரில் சந்தித்து அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: