12 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

மதுரை: 12 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த அடிப்படை பணிகள் கூட தொடங்கவில்லை. இதனால் பக்தர்கள், வேதனை அடைந்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு பிப்.2ம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் மற்றும் 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்தன. இந்த சேதமடைந்த பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கவில்லை.

 ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சேதமடைந்த பகுதிகளை 5 கட்டமாக ஆய்வு செய்தனர். அதன் அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டனர். அந்த அறிக்கையின் படி சேதம் ஏற்பட்ட பழமை வாய்ந்த வீரவசந்தராயர் மண்டபத்தை ரூ.20 கோடியில் பழமை மாறாமல் முன்பு இருந்தது போன்று புனரமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

 இதற்கான கற் தூண்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, நாமக்கல் மாவட்டத்தில் நன்கு விளைந்த கருங்கற்களை தேர்வு செய்தனர். அதனை வெட்டி எடுத்து கொள்ள அரசு அனுமதி கொடுத்து, அமைச்சர்கள் தலைமையில் பூமி பூஜை போட்டு பல மாதங்களாகி விட்டது. ஆனால் அதை கொண்டு வராமல், 3 ஆண்டுகளாக புனரமைக்கும் பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இதற்கிடையே 12 வருடத்திற்கு ஒரு முறை மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அந்த வகையில் கடந்த 2009ம் ஆண்டு மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2020-21ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான அடிப்படை பணிகள் கூட இதுவரை நடக்கவில்லை. இது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூகஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு கலைநயம் இழந்து உள்ளது. புதிய அதிகாரி பதவி ஏற்று 7 மாதத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால் புனரமைப்பில் அடிப்படை பணிகளை கூட தொடரவில்லை. கும்பாபிஷேகம் நடத்தம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக இந்து அறநிலைத்துறை கமிஷனர், தக்கார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இந்து அறநிலைத்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘12 வருடத்திற்கு ஒருமுறை வரும் கும்பாபிஷேகம் பக்தர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு  இருக்கும். ஆனால் மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு அடிப்படை பணிகள் கூட தொடங்கவில்லை. பழநி, திருச்செந்தூரில் கோயிலை நிர்வாகம் செய்ய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்தது போல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் ஐஏஎஸ் அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும். மேலும் கோயிலில் தீ விபத்து புனரமைப்பு,  கும்பாபிஷேகம், பராமரிப்பு பணிக்கு என தனி அலுவலர்களை நியமித்து பணிகளை தொடங்க வேண்டும்’ என்றார்.

Related Stories: