காயம் இனி மாயமாகும்!

நன்றி குங்குமம் டாக்டர்

செய்திகள் வாசிப்பது டாக்டர்

அதிவிரைவில் காயங்களை ஆற்றுவதற்கான நவீன டிரஸ்சிங் முறையை சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய சிகிச்சையின் மூலம் சர்க்கரை நோயாளிகளின் காயத்தையும் ஆற்றிவிட முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

மிகக் குறைந்த அளவு Graphene oxide ஏற்றப்பட்ட Nanocomposites dressing சிகிச்சை முறையின் மூலம் வேகமாக காயங்களை ஆற்றிவிட முடியும் என்பதுதான் கண்டறியப்பட்டுள்ளது. ஐஐடி பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன், தன்னுடைய ஆராய்ச்சி மாணவர் பொன்ராகவுடன் இணைந்து இந்த சிகிச்சையை உருவாக்கியுள்ளார்.

ஆரோக்கியமான நபருக்கு இயல்பாக ஏற்பட்ட காயத்தில் பரிசோதித்துப் பார்த்தபோது சிகிச்சை ஏதுமின்றி 23 நாட்களில் காயம் ஆறியது. அதுவே Nanocomposites dressing  நவீன சிகிச்சைமுறையில் காயம் ஆறுவதற்கு 16 நாட்கள் மட்டுமே ஆனது. இதேபோல சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்ட காயம் சிகிச்சை ஏதுமின்றி ஆறுவதற்கு 26 நாட்களும், இந்த நவீன சிகிச்சை முறையில் 20 நாட்களும் மட்டுமே ஆனது.

வழக்கமாக நீரிழிவாளர்களுக்குக் காயம் ஏற்பட்டால் ஆறுவதற்கு கால தாமதம் உண்டாகும். பாதிப்பு ஏற்படும் தீவிரத்தைப் பொருத்து உடல் உறுப்புகளை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

இந்நிலையில் Nanocomposites dressing முறையின் மூலம் நீரிழிவாளர்களுக்குக் காயம் ஏற்பட்டால் விரைவாக ஆற்றி விட முடியும் என்பதும், கையையோ, காலையோ அகற்ற வேண்டிய தேவை இல்லை என்பதும் வரவேற்பைப் பெறும் செய்தியாகவே இருக்கும். விலங்குகளிடம் வெற்றி பெற்ற இந்த சிகிச்சை விரைவில் நடைமுறைக்கு வந்தால் காயத்தால் அவதிப்படுகிற பலரும் பலன் பெறுவார்கள்!

- கௌதம்

× RELATED முதியோர் நலன் காப்பது நம் கடமை!