தனி மனிதருக்காக தாமதப்படுத்துவது நல்லதல்ல: சென்னை வெளிவட்டச் சாலை 2-ம் பகுதியை உடனே திறக்க ராமதாஸ் வலியுறுத்தல்.!!!

சென்னை: சென்னை வெளிவட்டச் சாலை இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும், பிற மாநிலங்களில் இருந்து சென்னை வழியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் சென்னைக்குள்  நுழையாமல் புறவழிச் சாலைகள் வழியாக பயணிப்பதற்கு வசதியாக சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை 62.30 கி.மீ தொலைவுக்கு ரூ.2156.40 கோடி செலவில் வெளிவட்டச் சாலை அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டு 2012-ஆம் ஆண்டில்  பணிகள் தொடங்கப்பட்டன.

இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரையிலான 29.65 கி.மீ தொலைவுக்கான சாலையில், 27 கி.மீ நீள சாலைப் பணிகள் மட்டும் ரூ.1081.40 கோடியில் முடிக்கப்பட்டு, 2014-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அதே  ஆண்டில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை 30.50 கி.மீ தொலைவுக்கு ரூ.1075 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் கட்ட வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, உடனடியாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

நெமிலிச்சேரி - மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டப் பணிகளில் 97% இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டன. கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முழுமையாக பணிகள் நிறைவடைந்து  விட்டன. ஆனால், அதன்பின் ஏறக்குறைய ஓராண்டு ஆகியும் சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதி திறக்கப்படவில்லை. இந்த சாலையை தமிழக முதலமைச்சர் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே,  திறப்புவிழா தாமதப்படுத்தப் படுவதாக இந்த சாலையையொட்டிய பகுதிகளில் வாழும் மக்கள் கூறியுள்ளனர்.

லட்சக்கணக்கான மக்களுக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான சாலையின் திறப்பு விழா எந்த ஒரு தனி மனிதருக்காகவும் தாமதப்படுத்தப்படக்கூடாது. இரண்டாம் கட்ட வெளிவட்டச் சாலை உடனடியாக திறக்கப்பட வேண்டும். சென்னையிலும்,  புறநகர் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் சென்னை வெளிவட்டச் சாலை முக்கியப் பங்காற்றும். தேசிய நெடுஞ்சாலை 45, தேசிய நெடுஞ்சாலை 205, தேசிய நெடுஞ்சாலை 4, தேசிய நெடுஞ்சாலை 5 ஆகிய  நான்கு தேசிய  நெடுஞ்சாலைகளை சென்னை வெளிவட்டச்சாலை இணைக்கிறது.

இத்தகைய முக்கியமான சாலை ரூ.1075 கோடிக்கும் கூடுதலான செலவில் அமைக்கப் பட்டு, யாருக்கும் பயன்படாமல் கிடப்பது நல்லதல்ல. இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும்,  தொழில் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  அப்படி ஒரு சூழலை உருவாக்கிவிடக் கூடாது.நெமிலிச்சேரி - மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால்,  பல்வேறு குளறுபடிகள் காரணமாக அந்த சாலைப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஆனது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு பணிகள் முடிவடைந்த பிறகும் கூட ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக அதன் திறப்பு விழாவை  தாமதப்படுத்துவது சரியல்ல.

இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வரும் சரக்கு ஊர்திகளும், திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களும்  சென்னை மாநகருக்குள் நுழையாமலேயே தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியும். இதன் மூலம் சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

எனவே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்  போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதியை  உடனடியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: