மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கிடைக்குமா?

*எதிர்பார்ப்பில் பயணிகள், வர்த்தகர்கள்

மன்னார்குடி : பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் மன்னார்குடி-பட்டுக்கோட்டை இடையேயான புதிய ரயில் பாதை திட்டத்திற்கு விரைவில் வெளியாக உள்ள 2021-22 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற கேள்வி ரயில் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டை வரை 55 கிமீ தூரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க அப்போதைய ரயில்வே நிலைக்குழு தலைவராக இருந்த திமுக எம்பி டி.ஆர்.பாலு எடுத்த தொடர் முயற்சி காரணமாக ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 2010ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்தார்.

அதில் ஒரு பகுதியாக நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வரையிலான 14 கி.மீ. தூரத்திற்கு ரூ.79 கோடி செலவில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு அதில் கடந்த 2011 செப்டம்பர் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.அதனை தொடர்ந்து மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா எடுத்த தொடர் முயற்சி காரணமாக நீடாமங்கலம்-மன்னார்குடி இடையே சுமார் ரூ.15 கோடி மதிப்பில் மின்மயமாக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மேலும், மன்னார்குடி ரயில் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரக்கு முனையமும் செயல்பட துவங்கி உள்ளது.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் மீதமுள்ள மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான 41 கி.மீ. தூரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க 196 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக 2012ம் ஆண்டில் விரிவான சர்வே மேற்கொள்ளப்பட்டது. ரூ.8.7 கோடியில் கண்ணனாறு பாலமும், ரூ.7.2 கோடியில் நசுவானி ஆற்றப்பாலமும், ஏறக்குறைய அதே மதிப்பில் பாமினி ஆற்றுப் பாலம் என 3 பெரிய பாலங்கள் 2013ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டு அப்பணிகள் நீண்ட ஆண்டுகளாக அஸ்திவாரத்தோடு நிற்கிறது.

இதற்கான முதல் கட்ட நிதி, அகலபாதை திட்ட நிதியில் இருந்து நிதியாண்டு 2013-14ல் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த பாலங்கள் கட்டுமானத்திற்கு திருவாரூர்-காரைக்குடி அகலப்பாதை திட்ட நிதியில் இருந்து நிதி பிரித்து வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது வரை நிதி வழங்கப்படவில்லை.

இதனால் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் பணிகள் நடைபெறாமல் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. தொடர்ந்து நிதி ஒதுக்கப்படாததால் பாலங்கள் கட்டும் பணிகள் தூண்கள் போடப்பட்டதோடு நின்றுவிட்டன.

மற்ற பணிகள் எதுவும் நடைபெற வில்லை. இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி கடந்த 2019ம் ஆண்டு இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கி இருப்பதாக தெரிவித்திருந்தார். இருந்தும் இந்த திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இத்திட்டம் நிறைவேற்றுவதில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாக ரயில் பயணிகள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, விரைவில் வெளியாக உள்ள மத்திய பட்ஜெட்டில் மன்னார்குடி பட்டுக்கோட்டை இடையே ஆன அகல ரயில்பாதை திட்டத்திற்கு சிறப்பு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கிடப்பில் கிடக்கும் பணிகளை துவக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து மகாதேவப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜசோழன் கூறுகையில், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது சரியல்ல.

மன்னார்குடி-பட்டுக்கோட்டை இடையே ரயில்பாதை அமைக்கப்பட்டால் அது டெல்டா மாவட்டங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்த திட்டத்திற்காக ரயில் பாதை அமைக்க தேவையான இடங்களை ஆர்ஜிதம் செய்ய தனி தாசில்தாரை நியமனம் செய்வதோடு வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு தனி நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>