அயோத்தி ராமர் கோயிலுக்கு கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜ எம்.பியுமான கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதையடுத்து கோயில் கட்டுமான பணிகளுக்காக நாடு முழுவதும் நிதி திரட்டும் பணியில், அயோத்தி ராமர் கோயில் கட்டுமான கமிட்டி தீவிரம் செலுத்தி வருகிறது. டெல்லியிலும் மாநில பாஜ சார்பில் நன்கொடை திரட்டும் பணி மும்முரம் ஆகியுள்ளது.

அதற்காக ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.1,000 என நன்கொடை ரசீது புத்தகங்களுடன் பாஜவினர் களம் இறங்கியுள்ளதாக பாஜ பொது செயலரும், பிரசார கமிட்டி அமைப்பாளருமான குல்ஜித் சாஹல் தெரிவித்துள்ளார். வரும் 1ம் தேதி முதல் வீடு, வீடாக நிதி திரட்டும் பணியில் பாஜ தொண்டர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், நாடு போற்றும் வகையில்  அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக உருவாக தானும், தனது குடும்பத்தினரின் பங்களிப்பாகவும் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக கிழக்கு டெல்லி எம்.பியும், கட்சியில் சேர்ந்து குறுகிய காலத்தில் மாநில பாஜ தலைவர்களில் தவிர்க்க முடியாத ஒருவராகவும் விஸ்வரூபம் எடுத்துள்ள கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கம்பீர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பெருமைக்குரிய வகையில் ராமர் கோயில் அயோத்தியில் உருவாக வேண்டும் எனும் ஒவ்வொரு இந்தியரின் கனவும் நனவாகப் போகிரது. சமத்துவமும், ஒற்றுமையும் நிலை பெறுவதை உலகிற்கு கோயில் பறைசாற்றும். அதற்கான ஒரு சிறிய நன்கொடையாக குடும்பத்தினரின் இணைந்து நான் ரூ.1 கோடி வழங்குகிறேன்’’, எனக் கூறியுள்ளார்.

Related Stories: