தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 8.5 கோடியில் வாக்களிக்க தகுதியானவர்கள் 6.27 கோடியா? வெறும் 2 கோடி பேர் மட்டுமே 18க்கு கீழ் இருக்கிறார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 8.5 கோடி மக்கள் தொகையில் 6.27 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 பேர் உள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இதில் ஆண்கள் 3,61,37,975 பேரும், பெண்கள் 3,60,09,055 பேரும் ஆகும். 2001ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் மக்கள் தொகை கூடுதலாக 97 லட்சம் பேர் அதிகரித்துள்ளதாக தெரியவந்தது. 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 8.5 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதாவது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி மக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் நேற்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6 கோடியே 27 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், அவர்கள் பெயர்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 18 வயதுக்கும் குறைந்த இளைஞர்கள், சிறுவர்கள், குழந்தைகள் சுமார் 2 கோடி பேர் மட்டும்தான் இருப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இருப்பதால்தான், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அதனால், தேர்தல் ஆணையம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, வாக்காளர் பட்டியலில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்கள் பெயர்கள் இருந்தால் நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதன்மூலம் வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் கள்ள ஓட்டையும் தடுக்க முடியும் என்பதே அவர்களின் கருத்தாகும்.

வயது வாரியாக

வாக்காளர்கள் விவரம்

வயது    வாக்காளர்கள்

18 முதல் 19 வரை    13,09,311

20 முதல் 29 வரை    1,23,95,696

30 முதல் 39 வரை    1,38,48,056

40 முதல் 49 வரை    1,32,44,564

50 முதல் 59 வரை    1,03,21,626

60 முதல் 69 வரை    67,23,232

70 முதல் 79 வரை    35,33,555

80 வயதுக்கு மேல்    12,98,406

மொத்தம்        6,26,74,446

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்லில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விருப்பம் இருந்தால் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 12,98,406 பேர் தபால் ஓட்டு போட தகுதியுள்ளவர்களாகின்றனர்.

Related Stories: