இந்திய அளவில் விபத்துகளை குறைக்கும் விவகாரம் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்

சென்னை: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் வாயிலாக இந்தியாவில் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நேற்று முதல் தொடங்கி அடுத்த மாதம் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி டெல்லி விக்யான் பவனில் நேற்று நடந்தது. இதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) வி.கே.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த விழாவில் கடந்த ஆண்டு சாலை விபத்தை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்திற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அதற்கான விருது வழங்கினார். இதனை தமிழ்நாடு போக்குவரத்து கூடுதல் ஆணையர் மணக்குமார் பெற்றுக்கொண்டார். இதேபோன்று சாலை விபத்துகளை குறைப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, மணக்குமார் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு தமிழகத்தில் சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 54 சதவீதம் அளவிற்கு சாலை விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது ‘’ என்றார்.

Related Stories: