மழை நீர் குறைந்த நிலையிலும் தாமிரபரணி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வரலாறு காணாத அளவில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஜனவரி 2வது வாரத்தில் தொடங்கிய கனமழை தொடர்ந்து 8 நாட்களுக்கும் மேலாக அடித்து நொறுக்கியது. இதனால் பிரதான அணைகள் ஏற்கனவே நிரம்பி இருந்த நிலையில் அதிக அளவில்நீர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் அதிகபட்சமாக 60 ஆயிரம் கனஅடியை தாண்டி வெள்ளநீர் பாய்ந்தது. அடித்து நொறுக்கிய கனமழை கடந்த 16ம்தேதி வரை மாவட்டம் முழுவதும் நீடித்தது. நேற்று(ஜன.17) மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை ஓய்ந்து கடந்த 8 நாட்களுக்கு பின்னர் வெயில் அடித்தது.

இன்று காலை 8 மணி பாபநாசம் அணையில் 3 மி.மீ., சேர்வலாறு அணையில் 3 மி.மீ, ராதாபுரம் வட்டாரத்தில் 4 மி.மீ. மழையும், தென்காசி மாவட்டம் கடனா அணையில் 5 மி.மீ. மழையும் பதிவானது. இதுதவிர நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று வேறு எங்கும் மழை பதிவு இல்லை. அதேநேரத்தில் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளது. இன்று காலை பாபநாசம் அணைக்கு 3 ஆயிரத்து 407.57 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையில் இருந்து 3 ஆயிரத்து 308.50 கன அடிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மணிமுத்தாறு அணைக்கு ஆயிரத்து 830.80 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து ஆயிரத்து 165 கன அடிநீர் வெளியேற்றப்பட்டது.

பாபநாசம் அணை நீர் இருப்பு தொடர்ந்து 142.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 149.15 அடியாக உள்ளது. மணிமுத்தாறு  அணை முழு கொள்ளளவான 118 அடி இருப்பில் உள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர் இருப்பு 49.20 அடி. இந்த அணைக்கு 301 கனஅடிநீர் வருகிறது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. நம்பியாறு அணை நீர் இருப்பு 22.96 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர் இருப்பு 39 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வரும் 60 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Related Stories:

>