அதிமுகவில் உழைத்து ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்து முதல்வர் பதவி பெற்றவன்: குறுக்கு வழியில் வென்றது கிடையாது; எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: அதிமுகவில் உழைத்து பல்வேறு பதவிகளை பெற்றுள்ளேன். ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்து முதல்வர், கட்சியில் பதவிகளை  பெற்றுள்ளேன். குறுக்கு வழியில் எப்பொழுதும் வென்ற சரித்திரம் கிடையாது என்று முதல்வர் எடப்பாடி கூறினார். மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி நேற்று சென்னை, அசோக்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: குழந்தை முதல் முதியவர் வரை தெரிந்த ஒரே அரசியல் தலைவர் தலைவர் எம்ஜிஆர்தான்.

இப்போது கட்சி தொடங்குகின்றவர்கள் கூட எம்ஜிஆர்  பெயரை உச்சரித்தால்தான் கட்சியே தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. நாம்தான் எம்ஜிஆரின் வாரிசு, ஜெயலலிதா வாரிசாக இருந்து கொண்டிருக்கின்றோம். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம்தான். இதுவரை ஏறத்தாழ 1.52 கோடி பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துள்ளோம். காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, ஏராளமானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் ரங்கராஜபுரம், தங்கசாலை சந்திப்பு, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, பேசின் சாலை, வடபழனி- பல்லாவரம் மேம்பாலம், வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை, எம்ஜி ரோட்டில் சுரங்கப்பாதை,

கொரட்டூர் ரயில்வே கீழ்பாலம் என பல்வேறு பாலங்களை கட்டி கொடுத்துள்ளோம். கொளத்தூர்-வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலம், ஸ்ரீபெரும்புதூர்  சாலையில் பாலம், மேடவாக்கம் சந்திப்பில் மேம்பாலம், வேளச்சேரி சந்திப்பு, கீழ்க்கட்டளை சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு மேம்பாலம், கொளத்தூர் வலது மேம்பாலம், நெடுங்களத்தூர் ரயில்வே மேம்பாலம், ராதாநகர் ரயில்வே கீழ் பாலம் என பல்வேறு பாலங்களை கட்டி கொண்டிருக்கிறோம். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையில் மெட்ரோ ரயில் முடிக்கப்பட்டுள்ளது. நாளை (19ம் தேதி) பிரதமரை  சந்தித்து இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு அழைப்பு விடுக்க இருக்கிறேன்.

கொரோனா வைரஸ் பரவும் சோதனையான இக்காலகட்டத்திலும் இந்தியாவிலேயே ரூ.60,714 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்த முதல் மாநிலம் தமிழகம். இதனால் ஏறத்தாழ 1.25 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தது. அதன்மூலம் இந்தாண்டு 313 மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. 41 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கடந்தாண்டு நீட் தேர்வில் 6 மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு கற்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அரசு வீடு கட்டி கொடுக்கும். வீடில்லாத குடும்பமே இல்லையென்ற நிலையை உருவாக்கி காட்டுவோம்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், ஒரு வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கொடுக்கிறோம். அதற்காக எங்கள் அரசால் ரூ.804 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய பெரிய நகரம் சென்னை என்று தேர்ந்தெடுத்தார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒரே அரசு அதிமுகதான். அதிமுக அரசை பொறுத்தவரை மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை. நான் முதல்வராகும்போது 10 நாளில் போய்விடும், ஒரு மாதத்தில் போய்விடும், 3 மாதங்களில் போய்விடும், 6 மாதத்தில் போய்விடும், ஒரு வருடத்தில் போய்விடும் என்று சொன்னீர்கள். இப்போது 4 ஆண்டுகள் நிறைவடைய போகிறது.

நான் முதல்வராக ஆகமுடியும் என்று எப்போதும் நான் நினைத்ததே கிடையாது. எனக்கு முதல்வர் என்ற பதவி தானாக வந்துவிட்டதா? 1989ல் எம்எல்ஏவாக வெற்றி பெற்று, 9 முறை தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். 7 முறை சிறை சென்றேன். எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், பிறகுதான் முதல்வரானேன். கட்சியில் பல பதவிகளை உழைத்து பெற்றுள்ளேன். யாருடைய தயவிலும் பெறவில்லை. ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்து கட்சி பதவிகளை பெற்றுள்ளேன். குறுக்கு வழியில் எப்பொழுதும் வென்ற சரித்திரம் கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>