மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து மோசடி: தலைமறைவான மாணவி தீக்‌ஷா பெங்களூருவில் கைது.!!!

சென்னை:  மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்த மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றபோது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தீக்‌ஷா, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததோடு, அதிக மதிப்பெண் பெற்றது போல் மோசடி செய்து கலந்தாய்வில் பங்கேற்றார். இந்த மோசடி பரிசோதனையின்போது தெரியவந்தது.

தொடர்ந்து, மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை பல் மருத்துவர் பாலசந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சம்மன் அனுப்பியும் ஆஜராகததால், போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதற்கிடையே, கடந்த 1-ம் தேதி பாலசந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான மாணவி தீக்‌ஷாவை தேடி வந்தனர். இந்நிலையில், மாணவி தீக்‌ஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டு சென்னை வரவழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடிக்கு உதவிய ஜெராக்ஸ் கடை உரிமையாளரையும் போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: