விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது இ-பைக் முதல் 10 நிமிடத்திற்கு ரூ.10 கட்டணம்

சென்னை: சென்னையில் இ - பைக் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதை பயன்படுத்த முதல் 10 நிமிடத்திற்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பொது போக்குவரத்தை முழுமையாக இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதன்படி சைக்கிள் பாதை மற்றும் நடைபாதைகள் அதிக அளவில் அமைக்கப்பட உள்ளது. இதன்படி, சென்னையில் தற்போது 50க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் நிலையங்கள் உள்ளன. இதில் 500 சாதாரண சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது. இந்நிலையில் சென்னையில் விரைவில் இ - பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்களை அறிமுகப்படுத்த சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்மார்ட் பைக் நிறுவனம் இதை செயல்படுத்த உள்ளது.

தற்போது சென்னையில் மொத்தம் 74 சைக்கிள் நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் 26 சைக்கிள் நிலையங்கள் என்று மொத்தம் 100 நிலையங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் 500 பழைய சைக்கிள், பேட்டரி மூலம் இயங்கும் புதிய 500 இ-சைக்கிள்கள் மற்றும் செயின் இல்லாத 500 அடுத்த தலைமுறை சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்தம் 1500 சைக்கிள்கள் பயன்பாட்டில் வர உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து சைக்கிள் நிலையங்களிலும் அனைத்து சைக்கிள்களும் இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

புதிய இ - பைக் பயன்படுத்த முதல் 10 நிமிடத்திற்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ரூ.1 கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள சைக்கிள் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிகளுக்கு முதல் 60 நிமிடத்திற்கு ரூ.5.50 கட்டணமும், அடுத்த 30 நிமிடத்திற்கு ரூ.9.90 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 மாத பயண அட்டைக்கு ரூ.769, ஒரு மாத பயண அட்டைக்கு ரூ.274, 1 நாள் பயண அட்டைக்கு ரூ.54 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: