தமிழக தேர்தல் டிஜிபி ஆவாரா ராஜேஷ்தாஸ்? தேர்தல் அதிகாரிக்கு நெருக்கடி கொடுக்கும் பீலா ராஜேஷ்

சென்னை: தமிழக தேர்தல் டிஜிபியாக ராஜேஷ்தாசை நியமிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியை வருவாய் துறை செயலாளர் பீலா ராஜேஷ் நெருக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக ஆட்சி ஒவ்வொரு முறை ஏற்படும்போதும், செல்வாக்கான பதவியில் இருப்பவர்தான் ராஜேஷ்தாஸ். இவர் ஏற்கனவே தென் மண்டல சட்டம் ஒழுங்கு ஐஜியாக நியமிக்கப்பட்டார். சில காலம் மதுவிலக்குத்துறையின் ஏடிஜிபியாக இருந்தார். இவர், மேற்கு மண்டலத்தில் செல்வாக்காக இருக்கும் அமைச்சர்கள் 2 பேரை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அந்த அமைச்சர்கள் இருவரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து இதுவரை இல்லாத வகையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டார்.

அவர் பதவி ஏற்ற பிறகு, தற்போதைய டிஜிபி திரிபாதியை டம்மியாக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அதன்படி மாவட்ட எஸ்பிக்கள், சரக டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்கள் இனிமேல் நேரடியாக என்னிடம்தான் பேச வேண்டும். நான்தான் சட்டம் ஒழுங்கு பதவியை கவனிக்கும் நேரடியான டிஜிபி. திரிபாதி தமிழக காவல்துறைக்கான தலைவர். அவர் மற்ற சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாமல் மற்ற பிரிவுகளையும் கவனிக்க வேண்டும். இதனால் சட்டம் ஒழுங்கு பதவியில் இருக்கும் அனைவரும் தினமும் என்னிடம்தான் பேச வேண்டும் என்று ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டுள்ளாராம்.

இதனால் டிஜிபி திரிபாதியிடம் இதுவரை பேசி வந்த சட்டம் ஒழுங்கு அதிகாரிகள், தற்போது ராஜேஷ்தாசிடம் மட்டும் எப்படி பேசுவது. டிஜிபி தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளார்களாம். இந்தநிலையில், தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதற்கு சில வாக்குறுதிகளை ராஜேஷ்தாஸ் வழங்கியுள்ளாராம். இதனால், எதிர்க்கட்சிகள் முதலில் ராஜேஷ்தாசைத்தான் மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுப்பார்களாம். அப்படி மனு கொடுத்தால் அவரை மாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளதாம். இதனால், தேர்தல் டிஜிபியாக நேர்மையான ஒருவரை போடும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாம். இதனால், தமிழக தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனே ராஜேஷ் தாசை தேர்தல் டிஜிபியாக நியமிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாம்.

தற்போது தேர்தல் அதிகாரியாக உள்ள சத்தியப்பிரதா சாகுவும், ராஜேஷ்தாசின் மனைவியான பீலா ராஜேஷும் ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்த அதிகாரிகள்(1997ம் ஆண்டு). இருவரும் நண்பர்கள். மேலும், சத்தியப்பிரதா சாகுவும், ராஜேஷ்தாசும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், ராஜேஷ்தாசை எப்படியும் தேர்தல் டிஜிபியாக நியமித்து விட்டால், அதற்கு பிறகு பாஜ அரசு, அவரை மாற்ற அனுமதிக்காது என்றும் கருதுகிறார்கள். இதனால் சாகுவிடம் பீலாவே வலியுறுத்தி வருகிறாராம்.

இதனால் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ராஜேஷ் தாசை நியமிப்பதற்கான அறிவிப்பும் வரும் என்கின்றனர் ஐஏஎஸ் அதிகாரிகள். ஆனால், அவ்வாறு தேர்தல் டிஜிபியாக ராஜேஸ்தாசை நியமித்தால், பல மாவட்ட எஸ்பிக்கள் நேரடியாக அவருடன் மோதுவதற்கும் தயாராக உள்ளார்களாம். இதனால் தேவையில்லாத குழப்பம் தேர்தல் நேரத்தில் ஏற்படும் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். தமிழக தேர்தல் நேரத்தில் என்னென்ன குழப்பங்கள் வரப்போகிறதோ என்று கவலைப்படுகின்றனர் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகள்.

* தமிழக தேர்தல் அதிகாரியாக உள்ள சத்தியப்பிரதா சாகுவும், ராஜேஷ்தாசின் மனைவி பீலா ராஜேஷும் ஒரே ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த அதிகாரிகள் (1997ம் ஆண்டு). இருவரும் நண்பர்கள்.

* சத்தியப்பிரதா சாகுவும், ராஜேஷ்தாசும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

Related Stories: