தாமதம் செய்யும் உணவுத்துறை அதிகாரிகளால் தண்டனை பெறும் ரேஷன் கடை பணியாளர்கள்: தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் உணவுத்துறை அதிகாரிகள் அபராதம் விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொருட்கள் வாங்கும்போது, பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு வாங்கிய பொருட்கள் குறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் செல்லும். மேலும் 107 எண் மூலம் ரேஷன் கடை முறைகேடுகளை தெரிவிக்கலாம். ஆனால் அதிகாரிகளின் தாமதம் காரணமாக ரேஷன் கடை ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கும்போது, “முதலாளிகளின் கார்டுகளை பெரும்பாலும் வீட்டில் வேலை செய்பவர்களே ரேஷன் கடைக்கு கொண்டு வந்து பொருட்கள் வாங்குகிறார்கள்.

அவர்கள் முதலாளிகள் சொல்வதை வாங்கிவிட்டு, மீதம் உள்ள பொருட்களை அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், எஸ்எம்எஸ் தகவல் அடிப்படையில் புகார் அளிக்கப்படுகிறது. புகார் அளித்த உடனே உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் உண்மை தெரியும். ஒரு மாதத்திற்கு பிறகு விசாரணை நடத்தினால் எப்படி உண்மையை கண்டுபிடிக்க முடியும். எந்தவித விசாரணையும் இல்லாமல் பழிவாங்கும் நடவடிக்கையாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. வேலைக்கார பெண்கள் அல்லது ஆண்கள் செய்யும் தவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். இந்த அதிகாரிகள்தான், குடோனில் இருந்து ரேஷன் கடைக்கு பொருள் எவ்வளவு வருகிறது என்று கண்காணிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதை கண்காணிப்பதே இல்லை. பழிவாங்கும் நடவடிக்கைகளை உணவு துறை அதிகாரிகள் கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

அபராதம் எப்படி?

ஒரு கிலோ அரிசி குறைந்தால் 25ம், ஒரு கிலோ சர்க்கரை 50, பருப்பு 75, கோதுமை 25, ஒரு லிட்டர் பாமாயில் 75,  மண்எண்ணெய் 50 என அபராதம் விதிக்கப்படுகிறது.

பயோமெட்ரிக் முறையை நிறுத்தியது ஏன்?

ரேஷன் கடைகளில் சில மாதங்களுக்கு முன் பயோமெட்ரிக் முறையை அவசர அவசரமாக அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், இன்டர்நெட் வேகமாக வேலை செய்யாததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு பணம் 2,500ம் ஸ்மார்ட் கார்டு மூலமே வழங்கப்பட்டது. அதனால், முறைகேடுகளை தடுக்க நல்ல தரமான இன்டர்நெட் வசதியுடன் பயோமெட்ரிக் முறையை உடனடியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: