100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா பொது மண்டபம் 40 கோடி செலவில் புனரமைப்பு: விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்

சென்னை: நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா பொது அரங்கு ரூ.40 கோடி செலவில் புனரமைக்கப்பட உள்ளது.  சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களில் ஒன்று விக்டோரியா பொது மண்டபம். இது, 1888ம் ஆண்டு, விக்டோரியா மகாராணியின் பொன் விழா நினைவாக கட்டப்பட்டது.  ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் மூர்மார்க்கெட் அருகில், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் ரிப்பன் மாளிகை கட்டிடத்துக்கு இடையில் இது அமைந்துள்ளது.  மெட்ரோ ரயில் பணி காரணமாக, இந்த கட்டிடம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நிதி உதவியின் கீழ் ரூ.40 கோடி செலவில் இந்த பொது மண்டபம் விரைவில் சீரமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பான கூட்டம் கடந்த வாரம் தலைமை செயலகத்தில் நடந்தது. சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:  மூன்றடுக்கு கொண்ட விக்டோரியா பொது மண்டபத்தின் தரைதளமானது 13,342 சதுர அடி பரப்பளவிலும், முதலாவது தளமானது 12,541 சதுர அடியிலும் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் மற்றும் முதல்  தளங்களில் இரண்டு பெரிய கூடங்கள் உள்ளன. இதில் தலா 600க்கும் மேற்பட்டவர்கள் அமரலாம். மேலும் 200 பேர் அமரக்கூடியதாக மரத்தால்  அமைக்கப்பட்ட காட்சியகம் உள்ளது. 19 மற்றும் 20ம் நூற்றாண்டில் இது ஒரு நாடக அரங்கமாகவும், மாநாட்டு அரங்கமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதை சீரமைத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் விக்டோரியா பொது மண்டபத்திற்கு முன்புறம் உள்ள இடத்தை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: