முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு காவல் துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பதக்கம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: காவல்துறையில் காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும் சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் (ஆண்/பெண்) முதல்நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர் நிலைகளில் 60 பேருக்கும் சிறப்பு பணி பதக்கங்கள் வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது.

இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி 400 ரூபாய் 2021 பிப்ரவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, நாய் படை பிரிவு மற்றும் காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்கு தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்க சுருள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: