98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் மற்ற வகுப்புகளும் படிப்படியாக திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஏளூரில் இலவச ஆடு மற்றும் கறவை மாடுகளை பயனாளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழக முதலமைச்சர் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வழங்கி உள்ளார். சுகாதார துறை அறிவுரை, ஆலோசனைப்படி பள்ளிகள் செயல்படும். எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.

98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர். முதல் கட்டமாக 10, 12ம் வகுப்பு திறக்கப்படுகிறது. இதற்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. இனி  படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை திறக்கலாம் என்பதை ஆய்வு செய்து திறக்கப்படும். பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு பொதுத்தேர்வு குறித்து அறிவிக்க உள்ளோம். பேருந்து இலவச பயண அட்டை இல்லை என்றாலும், ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: