போடி மெட்டுச்சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்: வாகன ஓட்டிகள் கலக்கம்

போடி: போடி மெட்டுச்சாலையில் நேற்று பாறைகள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் கலக்கத்துடன் சென்றனர்.தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் சாலையாக போடி மெட்டுச்சாலை உள்ளது. குறுகிய சாலையாக இருந்த இந்த சாலையை கடந்த 2014ல்  விரிவாக்கம் செய்தனர். இதையொட்டி சாலையோர பாறைகளை தகர்த்து, உயரமான தடுப்புச்சுவர்கள அமைத்து, மழைநீர் வடிந்தோட சிறுபாலங்களை  அமைத்தனர். இந்நிலையில், மழை காலங்களில் அடிக்கடி மரங்களோடு பாறைகளும் சரிந்து விழுகின்றன. நேற்று காலை 4வது கொண்டை ஊசி  வளைவை தாண்டி, ஆகாசப்பாறை அருகில் இருந்த பாறைகள் சரிந்து ரோட்டில் விழுந்தன.

அப்போது முன்னதாக போடி மெட்டிலிருந்து சென்ற  இரண்டு ஜீப்பும், அதில் இருந்த பயணிகளும் தப்பினர். இதையடுத்து மலைச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த மாநில  நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி மூலம் பாறைகளை அப்புறப்படுத்தினர். பின்னர் 5 மணி நேரம் கழித்து வாகனங்கள் மலைச்சாலையில் சென்றன. மலைச்சாலையில் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால், முந்தல்  சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். மலைச்சாலையில் பாறைகள் சரிந்த சத்தம் வெடிகுண்டு வெடித்தது போல  இருந்ததாக தெரிவித்தனர்.

Related Stories: