கர்நாடக மாநிலத்தில் திருமணம் பதிவு செய்ய தனித்துறை : முறையாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்

பெங்களூரு: மாநிலத்தில் திருமணங்களை பதிவு செய்வதற்காக தனித்துறை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு வரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்படும். கர்நாடக திருமண பதிவு சட்டம் 1976 விதியின் படி அனைத்து மதத்தினரும் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இடையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பிறப்பு-இறப்பு எப்படி பதிவு செய்யப்படுகிறதோ, அதேபோல், திருமணமும் முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசும் திருமண பதிவை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டது.

 

மாநிலத்தில் இச்சட்டம் அவ்வளவாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது வருவாய்துறையின் கீழ் இயங்கி வரும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம், கோயில்களில் திருமணம் செய்து கொண்ட சிலர் மட்டும் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் மாநிலம் முழுவதும் எவ்வளவு பேர் திருமணத்தை பதிவு செய்தார்கள் என்பதை துல்லியமாக கண்டறிய முடியாத நிலை தற்போதுள்ளது.  திருமண பதிவை ஏதாவது ஒரு துறையிடம் ஒப்படைக்க முன்வந்தாலும், ஏற்கனவே இருக்கும் வேலை பளு காரணமாக ஏற்காமல் தட்டி கழிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்னையில் பெரும் குழப்பம் நீடித்ததை தொடர்ந்து மாநில திட்டத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஆலோசனை குழுவை அரசு நியமனம் செய்தது. அவரிடம் திருமண பதிவை எந்த துறையிடம் ஒப்படைக்க வேண்டும், பதிவு செய்தவர்களின் விவரங்களை எப்படி பெற வேண்டும் என்பது உள்பட பல விவரங்கள் கொடுக்கும்படி கேட்கப்பட்டது.

அவர் ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளார். அதில் திருமணங்களை பதிவு செய்வதற்காக தனி பிரிவு தொடங்க வேண்டும். அதன் தலைவராக நிதித்துறை இயக்குனரை நியமனம் செய்ய வேண்டும். வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், மக்கள் நல்வாழ்வு, சட்டம் ஆகிய துறைகளின் முதன்மை அதிகாரிகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அறிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டு தனி பிரிவை தொடங்க முடிவு செய்துள்ளது.  இதற்கான முறையான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதம் நடக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்படும் என்று தெரியவருகிறது.

Related Stories: